யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நீண்டகால குத்தகை என்ற பெயரில் தென் இலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலய மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை ஆதிசிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த மாளிகையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அல்லது இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 106 பரப்பு கொண்ட சைவ சமய நிறுவனத்தின் மடத்தை அழித்து ஹோட்டல் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிலத்தை சமய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.