இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸ், இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் தலைமை தாங்கும் இந்த குழுவில் இலங்கையின் மிகப் பெரிய வெளிநாட்டுக் கடனாளியான சீனாவும் இணைவதற்கு வழி வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, கடந்த ஆண்டு முதல் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்ட முயற்சித்து வருகிறது.
கடனில் மூழ்கியிருக்கும் இலங்கை, சீன எக்ஸிம் வங்கியுடன் சுமார் 4.2 பில்லியன் டொலர் நிலுவை கடனை ஈடுசெய்யும் ஒப்பந்தத்தை எட்டிய ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த நாடுகளுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
சீன வங்கியுடன் எட்டப்பட்ட ஒப்பந்தமானது, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ், டிசம்பர் 6 ஆம் திகதி பிணையெடுப்பு பற்றிய முதல் மீளாய்வுக்கு இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையாக சுமார் 334 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்வோம் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.