ஜனநாயக இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்.
இந்தியாவை பிரித்தானியர்கள் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பிறகு 78 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முதல் தேசியக் கொடியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார்.
அன்றிருந்து வருடந்தோறும் ஒகஸ்ட் 15 ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதற்கமைய , இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, கொண்டாட்டங்கள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றன.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இது அவரது 11 வது சுதந்திர தின உரையாகும். உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என குறித்த உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ளார்.
அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.