தாய்லாந்தில் சுமார் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற பாடசாலை பேருந்து ஒன்று பாங்காக் புறநகர் பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பாடசாலை பயணத்திற்காக 44 பேரை ஏற்றிக்கொண்டு அயுத்தாயாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தலைநகரின் வடக்குப் புறநகர் பகுதியான பத்தும் தானி மாகாணத்தில் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீவிபத்தில் இருந்து 16 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். எனினும் பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா என்பதை போலீசார் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.