2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நவம்பர் 4 ஆம் திகதி ஆதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்தது.
அதன்படி, மொத்தம் 1,574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாடுகள்) 2025 டாடா ஐபிஎல் மெகா ஏலத்தின் ஒரு பகுதியாக பதிவு செய்துள்ளனர்.
மெகா ஏலமானது எதிர்வரும் நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும்.
இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் இரண்டாவது ஐபிஎல் ஏலம் இதுவாகும்.
உலகம் முழுவதில் இருந்தும் மொத்தம் 320 கேப் செய்யப்பட்ட வீரர்கள், 1224 அன்கேப்ட் வீரர்கள் மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஏலம் தொடங்கும் முன்பு ஒவ்வொரு அணியும் 4-5 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
மொத்தமாக 558.5 கோடி இந்திய ரூபாய் செலவில் 46 வீரர்களை 10 அணிகள் தக்க வைத்துள்ளனர்.
ஏலத்தில் ரூ.641.5 கோடிக்கு வீரர்கள் வாங்கப்பட உள்ளனர்.
ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது.
ஒரு சில அணிகள் 4 வீரர்களையும், ஒருசில அணிகள் 5 வீரர்களையும் தக்க வைத்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 2 பேரை மட்டும் தக்க வைத்து ரூ.110.5 கோடியுடன் ஏலத்திற்கு வருகிறது.
மெகா ஏலத்துக்காக அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 91 வீரர்களை பதிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து முறையே 76 மற்றும் 52 வீரர்களை பதிவு செய்துள்ளது.
அதேநேரம் இலங்கையைச் சேர்ந்த 29 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் கனடா வீரர்களும் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
சுவாரஷ்யமாக, இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட பெயர்கள் உட்பட 25 வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க முடியும்.
ஏலத்திற்கு முன்னதாக மொத்தம் 48 வீரர்களை உரிமையாளர்கள் தக்க வைத்துக் கொண்டதால், இரண்டு நாட்கள் ஏலத்தில் 204 இடங்கள் நிரப்பப்படும்.