கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சுமார் 250 படங்களுக்கு மேல் வெளியான நிலையிலும் அதில் முக்கிய நடிகர்களின் படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருந்தன. சிறுபட்ஜெட் படங்களே அதிக எண்ணிக்கையில் வந்தன.
ஆனால் இந்த 2025 புதிய ஆண்டில் முக்கிய நடிகர்கள், முக்கிய இயக்குனர்களின் பல படங்கள் திரைக்கு வருவதற்காக வரிசை கட்டி நிற்கின்றன. இது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
2025-ல் வெளியாக உள்ள சில முக்கிய படங்களின் விவரங்கள்:-
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருக்கிறது. இயக்குநர் பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் ‘வணங்கான்’ ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கும் படமாக இருக்கிறது.
இந்திய சினிமா ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக பார்த்து புளகாங்கிதம் அடைந்து வருகிறது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த வருடம் ‘கூலி’ திரைக்கு வருகிறது.
இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞரான கமல்ஹாசன், ஆகச்சிறந்த இயக்குனர் மணிரத்னம் இணைந்துள்ள ‘தக்லைப்’, இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 37 வருடங்களுக்குப் பிறகு கமல்- மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகி உள்ளது. இதுபோல் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘இந்தியன்-3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களையும் இந்த வருடம் திரையில் பார்க்கலாம்.
அரசியலுக்கு வந்துள்ள விஜய் நடிக்கும் 69-வது படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கான அதிரடி சண்டை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும், அரசியல் வசனங்களும் அதிகம் இடம்பெறும் என்கின்றனர். இது இந்த வருடம் இறுதியில் திரைக்கு வரும்.
அஜித்குமார் கார் ரேஸ், பயணங்கள் என ஒரு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும், அதே முக்கியத்துவத்தை சினிமாவுக்கும் தருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள ‘விடாமுயற்சி’யும் வெளி வருகிறது. இதுபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படமும் 2025 வருட ரிலீஸ் பட்டியலில் உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’, அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’, தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’, `அமரன்’ வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், இந்த வருடம் ரிலீசாக இருக்கின்றன.