ராஜஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆலய தரிசனம் செய்து விட்டு வேனில் வீடு திரும்பியவர்கள் மீது லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் இவ் விபத்து நடைபெற்றுள்ளதால், நித்திரை கலக்கத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

















