தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அறியப்படும் ராஜமௌலி பாகுபாலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்கள் மூலம் இந்திய சினிமாவில் தனக்கெனத் தனியிடம் பிடித்தார்.
அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ‘வாரணாசி’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் டைட்டில் அறிமுக நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
நடிகர்களான மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ராஜமௌலி இயக்கும் இந்தப் படம் 1,000 கோடி இந்திய ரூபா பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்துக்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.
ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மிகப் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு ‘வாரணாசி’ டைட்டில் வெளியிடப்பட்டது.
இந்தத் தலைப்பினைப் படக்குழு சிறிய டீசர் வெளியீட்டுடன் அறிவித்தது.
அந்த டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ராஜமௌலி, ‘வாரணாசி’ படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிற்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார்.
Premium IMAX Format
பெரும்பாலான திரைப்படங்கள் சினிமா ஸ்கோப் வடிவத்தில் எடுக்கப்படுகின்றன.
இந்த வடிவத்தில் திரைக்கு மேலும் கீழும் கருப்பு நிற இடைவெளி இருக்க நடுவில் காட்சி அமைந்திருக்கும்.
இந்த வடிவத்தை IMAX திரைகளில் வெளியிட வேண்டும் என்றால் அதன் விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும்.
இது முழுமையான ஐமேக்ஸ் அனுபவத்தைத் தராது.
தற்போது உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படம் முழுக்க முழுக்க ‘Premium IMAX’ வடிவத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வடிவத்தில் காட்சி அமைந்திருப்பதால், முழுத் திரையிலும் காட்சி நிறைந்து, பார்வையாளர்களுக்கு தத்ரூபமான மற்றும் பிரம்மாண்டமான அனுபவம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
IMAX திரையில் வெளியிடப்படும் படங்கள் பிரத்தியேகமாக அதற்கென உருவாக்கப்பட்ட கேமராக்களில் படமாக்கப்பட வேண்டும்.
ராஜமௌலி முன்னதாக இயக்கிய ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய திரைப்படங்கள் IMAX இல் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
IMAX சினிமா அனுபவம் என்பது கேமரா, ஃபிலிம் ஃபார்மேட், ப்ரொஜெக்டர் மற்றும் தியேட்டர் வடிவமைப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்த அமைப்பாகும்.



















