சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின் தாயார் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 8 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போனதாக, 17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியிலிருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே அந்த நகைகளைத் திருடியது தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு குறித்த யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதமுள்ள நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ததாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், அவர் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்ட ஒரு நபரின் ஆலோசனையில் இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 27 இலட்சம் ரூபாய் செலுத்தியதும், மேலும் பணம் செலுத்துவதற்காகவே காதலன் வீட்டில் நகை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.













