உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும் “இப்போது ஒரு முக்கியமான தருணம்” என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர்.
உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே கடந்த வாரம் வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் அண்மைய பதிப்பு குறித்து விவாதிக்க உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரை திங்களன்று (08) லண்டனில் சந்தித்தார்.
ரஷ்யாவுடன் விரைவான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்கா கெய்வ் மீது அழுத்தம் கொடுப்பதால், உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு மேலதிக பணிகள் தேவை என்று ஐரோப்பியத் தலைவர்கள் இதன்போது கூறினர்.
நேட்டோ அதிகாரிகளைச் சந்திக்க பிரஸ்ஸல்ஸுக்குச் சென்ற ஜெலென்ஸ்கி, செவ்வாயன்று (09) உக்ரேன் அமெரிக்காவுடன் திருத்தப்பட்ட திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறினார்.
கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர்.













