ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர்.
அத்துடன் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக முதல் கட்டமாக சுமார் 300,000 மக்கள் குடிநீரை பெறும் நோக்கில், யாழ் நகர பிரதேசங்களில் 822 கி.மீ தூரத்திற்கு நீர்க்குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.
இது யாழ் மாவட்டத்தின் சுமார் 184 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறவுள்ள ஓர் பாரிய நீர் வழங்கல் திட்டமாகும்.
இதேவேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் நீட்சியாக ஒரு இலட்சம் மக்களைப் பயனாளர்களாக உள்ளடக்கும் வகையில், கிளிநொச்சி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை, 284 கிலோமீற்றர் தூரத்திற்கு நீர் குழாய்களை அமைக்கும் திட்டமாக கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நீர் விநியோக திட்டம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் காணொளியாக இணைய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்,இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த ,யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள் எனப் பலர் நேரடியாக கலந்துகொண்டனர்.


















