ஆப்கானிஸ்தானில் ஹசாரா இன மக்கள் 13 பேரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பதின்ம வயது சிறுமியொருவரும் அடங்குகுவதாகவும் இந்த படுகொலைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் கீழ் இராணுவ வீரர்களாக பணியாற்றி தலிபான்களிடம் சரணடைந்த 9 பேரும் கொல்லப்பட்டுள்ள நிலையில் இவை போர்க் குற்றங்களாக அமையுமெனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை தலிபான்கள் நிராகரித்துள்ளதுடன், ஒரு பக்க நியாயத்தை மாத்திரமே சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளதாகவும் சாடியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மூன்றாவது மிகப்பெரிய இனக்குழுவாக ஹசாரா சமூகத்தினர் அதிகமாக ஷியா இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள் என்பதுடன் நீண்ட காலமாக பாகுபாடுகளையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.