” நான் செய்த தவறு என்ன அம்மா… தவறாக நடந்துகொண்டவர்கள் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நடமாடுகின்றனர். பாதிக்கப்பட்ட என்னை ஏன் குற்றவாளியாக இந்த சமூகம் நடந்துகின்றது “ என்பதே அச் சிறுமியின் ஆள் மனதில் எழுந்த கேள்வியாகும்.
செய்யாத ஒரு குற்றத்திற்காக என்னை இந்த சமூகமே ஒதுக்கி வைக்கின்றது என்ற வலிமிகுந்த வார்த்தைகளை தனது தாயிடம் பகிர்ந்து கொண்ட அவள் அதன் பின்னர் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டால்.
அவளுக்கு பதினைந்து வயதுதான். கொழும்பில் உள்ள பிரபலமான பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த அவள் குறும்புத்தனங்களிலும் படிப்பிலும் மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டுதான் இருந்திருப்பாள். ஆனால் அவளுடைய அப்பாவி புன்னகைக்குப் பின்னால் எந்தக் குழந்தையும் சுமக்கக்கூடாத ஒரு கதை இருந்தது. அவளுடைய அழுகை யாராலும் கேட்கப்படாமல் போனது, குறும்புத்தனங்கள் நிராகரிக்கப்பட்டு அவமானம் மற்றும் அமைதியின் கீழ் அவை புதைக்கப்பட்டது.
எவனோ ஒருவனது காம தேவைக்கு பலியான ஒரு அப்பாவி சிறுமி, இந்த சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டால்.

இது அவள் அனுபவித்த வேதனை மட்டுமல்ல, இலங்கையில் ஒவ்வொரு நாளும் அவளைப் போன்ற அப்பாவிக் குழந்தைகள் தமக்குள்ளேயே அவதிப்பட்டுக்கொண்டு மூடிய கதவுகளுக்குப் பின்னால், பாடசாலைகளில், தெருக்களில்,டிஜிட்டல் உலகில் தினந்தினம் பலியாகின்றார்கள்.அவர்களின் அப்பாவித்தனம் பறிக்கப்பட்டு அக் குழந்தைகளின் வலி கவனிக்கப்படாமலேயே போகிறது.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல – அது ஒரு தேசத்தின் ஆன்மாவில் ஏற்ப்பட்ட ஒரு காயம் என்பதே உண்மையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துப்பார்த்தோமானால் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான எண்ணிக்கை ஆபத்தான வேகத்தில் மோசமடைந்து வருகிறது என்பதை உணர முடியும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதியோகபூர்வ அறிக்கைக்கு அமைய 2023ஆம் ஆண்டில், 11,387 சிறுவர் துஸ்பிரயோக குற்றங்கள் தொடர்பான முறைபாடுகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு (2024 ஆம் ஆண்டில்) இந்த எண்ணிக்கை, 10,674 முறைபாடுகளாக பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 2,713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கின்றது. கடந்த பத்து ஆண்டுகளில் 101,800 சிறுவர் துஸ்பிரயோக குற்றங்கள் தொடர்பான முறைபாடுகள் பதிவாகியுள்ளன என்பதை எம்மால் நினைத்துப்பார்க்க முடிகின்றதா?.

இந்த எண்ணிக்கை வெறுமனே வெளியில் தெரியும் இலக்கங்கள் மட்டுமே. ஆனால் எண்ணற்ற சம்பவங்கள் பயம்,வெட்கம், சமூகத்தின் தவறான பார்வை என்ற காரணங்கள் எனும் சுவர்களுக்குப் பின்னால் மறைக்கப்படுகின்றன. இவை வெறுமனே குற்றங்கள் என்பதைத் தாண்டி திருடப்பட்ட குழந்தைப் பருவத்தையும், உடைந்த பாதுகாப்பு உணர்வையும், பெரியவர்கள் மற்றும் பாதுகாக்க வேண்டியவர்கள் மீதான அவநம்பிக்கையையும் அதிகளவில் உணர்த்துகின்றன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டு முதல் காலாண்டின் மாவட்ட அடிப்படையிலான தரவுகளுக்கு அமைய, இலங்கை முழுவதும் குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்த ஒரு வேதனைக்குரிய வரைபடைத்தையே வெளிப்படுத்தியுள்ளது. இதில்,அதிக எண்ணிக்கையிலான குற்றச்செயல்கள் மற்றும் முறைப்பாடுகள் ( 418 ) கொழும்பில் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கம்பஹாவில் (344) மற்றும் களுத்துறையில் (192) குற்றச்செயல்கள் மற்றும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை அதிக எண்ணிக்கையிலான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தொடர்புடைய புகார்களைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் மாறியுள்ளது. நாட்டின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மற்றும் வளங்கள் நிறைந்த மாகாணமாக இருந்தாலும் இந்த தரவுகள் ஒரு கசப்பான உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
குழந்தை துஷ்பிரயோகம் வறுமை அல்லது பின்தங்கிய பகுதிகளின் நிலைமை என்பதுடன் மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக இந்த அவலம் வளர்ச்சியின் மையத்தில் கூட இடம்பெறுகின்றது. இந்த எண்ணிக்கைகளுக்குப் பின்னால் நகர வாழ்க்கையின் பரபரப்பில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் சிறார்கள் உள்ளனர் என்ற உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கையின் சிறுவர் துஷ்பிரயோக நெருக்கடி மிகவும் கவலைக்குரிய விடயமாகியுள்ள அதே நேரத்தில், இது மிகவும் பரந்த மற்றும் அதே அளவு கொடூரமான உலகளாவிய யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள், 2 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வகையான உடல், உள ரீதியிலான பாலியல் வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
அவர்களில், ஐந்து வயதுக்குட்பட்ட 400 மில்லியன் பேர் தங்கள் சொந்த வீடுகளில் உடல் ரீதியான தண்டனை அல்லது உளவியல் ரீதியான வேதனைகளை அனுபவிக்கின்றனர்.அது மாத்திரமல்ல இன்றைய டிஜிட்டல் யுகத்தில்,ஆண்டுதோறும் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணைய பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்ற அதிச்சி தரவுகளையும் அவதானிக்க முடிகின்றது.

சிறுவர்களை பாதுகாப்பது என்பது சட்ட அமலாக்கம் அல்லது சமூக சேவைகளின் பொறுப்பு மட்டுமல்ல, இது ஒவ்வொரு பெரியவரும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு தேசமும் பகிர்ந்து கொள்ளும் கடமையாகும். இந்த துஷ்பிரயோக சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவர,வலுவான சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளில் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது மட்டுமல்லாது துஷ்பிரயோக குற்றங்களில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் வெறுமனே சட்ட பாதுகாப்பை தாண்டி பாடசாலைகள் -குழந்தைகள் சுதந்திரமாகப் பேசவும், அவர்களின் உரிமைகள் குறித்து கல்வி கற்கவும் கூடிய பாதுகாப்பான இடங்களாக மாற்றப்பட வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் விழிப்புணர்வுடனும் அதேபோல் துஷ்பிரயோகம் மேலோங்க அனுமதிக்கும் மௌனம் மற்றும் களங்கத்தை சமூகம் கைவிடவும் வேண்டும். இணைய சுரண்டலை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமல்லாமல், அதை முறையிடவும் தடுக்கவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.
மிக முக்கியமாக, ஒவ்வொரு பிள்ளையின் புலம்பலையும், நடத்தையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும், மௌனமான அழுகையையும் நாம் கேட்க தயாராக வேண்டும். ஏனெனில் குழந்தைகளைப் பாதுகாப்பதில் முதல் படி அவர்களை நம்புவதாகும். குழந்தைப் பருவத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்படலாம், ஆனால் நம்பிக்கை, அக்கறை,நீதி மற்றும் கூட்டு பொறுப்புடன் ஒரு சமூகமாக அந்தக் கண்ணாடியை நொறுங்கவிடாமல் பாதுகாக்க முடியும்.
யாராவது பாதுகாப்பார்களா என்ற ஏக்கத்தில் இன்னும் எத்தனை குழந்தைகள் இரவில் தலையணைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு அழ வேண்டும்? பாடசாலை சீருடையின் பின்னால் எத்தனை காயங்கள் மறைந்திருக்க வேண்டும்? இன்னும் எத்தனை எதிர்காலங்களை பறிகொடுக்க வேண்டும் ? இவை வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அப்பாவித்தனம் இழந்தது, நம்பிக்கை உடைந்தது, பதிலளிக்கப்படாத துஷ்பிரயோகம் பற்றிய ஒவ்வொரு அறிக்கையும் அவமானம் அல்லது பயத்தால் மௌனமாக்கப்பட்ட ஒவ்வொரு அழுகையும், நம் அனைவரின் தோல்வியாகும்.
இது அமைப்புகள் அல்லது அதிகாரிகளின் மட்டுமல்ல குழந்தைகளைப் பாதுகாப்பதாகக் கூறும் ஒரு சமூகத்தின் தோல்வி. சட்டம், நீதி மற்றும் மனிதாபிமானத்தை மதிக்கும் ஒரு தேசமாக நாம் நம்மை அழைத்துக் கொள்ள வேண்டுமென்றால்,சிறுவர் பாதுகாப்பு என்பது அனைத்திலும் முன்னுரிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் ஒரு சமூக இயக்கமாக மாறிக்கொள்ள வேண்டும். ஏனெனில்,நமது மனிதநேயத்தின் உண்மையான அளவுகோல் நாம் வலிமை மிக்கவர்களாக எவ்வாறு நடத்துகிறோம் என்பதில் அல்ல -மாறாக வலிமையற்றவர்களை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது.இந்த விடயத்தில் ஏதோ ஒரு விதத்திலேனும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தையை விட பலவீனமுற்றவர்கள் இந்த உலகில் எவரும் இல்லை.
நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புள்ளி விபரங்கள் சிலவற்றை கீழே காணலாம்!















