ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா AI171 விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில் மட்டுமே இருப்பதாகவும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.
கருப்புப் பெட்டி விசாரணைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.
சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், கேட்விக் நோக்கிச் செல்லும் AI171 போயிங் 787-7 ட்ரீம்லைனர் விமானம், மேகானி நகரில் அமைந்துள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தில் மோதியது.
விமானத்தில் இருந்த 242 பேரில், ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
மேலதிகமாக, தரையில் இருந்த 29 பேரும் பயங்கரமான விமான விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தில் மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் 13 அன்று விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அதிகாரிகள் மீட்டனர்.
கருப்புப் பெட்டி என்பது ஒரு சிறிய இயந்திரமாகும், இது ஒரு விமானம் பறக்கும் போது அதைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்கிறது.
ஏதேனும் விபத்து ஏற்பட்டால் விமான விசாரணைகளுக்கு இந்தப் பெட்டி உதவுகிறது.
கருப்புப் பெட்டியில் இரண்டு ரெக்கொர்டர்கள், விமானி குரல்கள் மற்றும் விமானி அறை ஒலிகளுக்கான கொக்பிட் குரல் ரெக்கார்டர் மற்றும் ஒரு தனி விமானத் தரவு ரெக்கொர்டர் ஆகியவையும் உள்ளன.



















