2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 15 ஆவது போட்டியில் இலங்கை அணியானது நியூஸிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
அதன்படி, இந்தப் போட்டியானது இன்று (14) பிற்பகல் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியானது இலங்கை அணியின் உற்சாகமான மீள்தன்மைக்கும் நியூஸிலாந்து அணியின் ஒழுங்கமைக்கப்பட்ட துல்லியத்திற்கும் இடையே ஒரு சுவாரஷ்யமான மோலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான ஏமாற்றங்களுக்குப் பின்னர், தங்கள் பயணத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வரும் நோக்கில் இலங்கை இந்த போட்டியில் களமிறங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் டக்வெத் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அவர்களின் இரண்டாவது போட்டி இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதே நேரத்தில் அவர்களின் அண்மைய மற்றும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்திடம் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவினர்.
254 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிச் சென்ற இலங்கை 164 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக, இலங்கையின் ஆயத்தமும் சீரற்றதாக இருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான மழைக்கால பயிற்சி ஆட்டமும், பங்களாதேஷிடம் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியும், இறுக்கமான போட்டிகளை முடிக்க அவர்கள் போராடியதை எடுத்துக்காட்டுகின்றன.
மறுபுறம் நியூசிலாந்து, தங்கள் போட்டியின் சீரற்ற தொடக்கத்திற்குப் பின்னர் நம்பிக்கையின் பாதையில் திரும்பியுள்ளது.
தனது முதல் போட்டியில் நியூஸிலாந்து அவுஸ்திரேலியாவிடம் 89 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
அதன் பின்னர், தொன்னாப்பிரிக்காவிடம் வீழந்தது.
எனினும், மூன்றாவது போட்டியில் பங்களாதேஷை 100 ஓட்டங்களினால் தோற்கடித்து நம்பிக்கையின் பாதையில் திரும்பியுள்ளது.
எனவே, கொழும்பில் நடைபெறும் இந்த மோதல் இலங்கைக்கு தங்கள் திறமையை மீண்டும் கண்டறிய வாய்ப்பளிக்கிறது.
அதே நேரத்தில் நியூசிலாந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது.
இலங்கைக்கு எதிரான 16 ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் இறுதியாக கடந்தே 2025 ஆம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின.
அங்கு நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.



















