நியூசிலாந்தின் மிக உயரமான சிகரமான அவோராகி (Aoraki) அல்லது மவுண்ட் குக்கில் ஏற முற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் 3,724 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் ஏற முயன்ற நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்தனர்.
ஏனைய இருவரும் அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் ஹெலிகொப்டர் மூலமாக பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை மீட்கப்பட்டனர்.
உயிரிழந்த மற்றும் மீட்கப்பட்ட மலையேறிகளின் விபரம் பகிரங்கமாக வெளிப்படுத்தபடவில்லை.
ஆனால் நியூசிலாந்து ஊடக நிறுவனமான ஸ்டஃப், உயிரிழந்தவர்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மலை வழிகாட்டி என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு ஆல்ப்ஸ் மலையின் மேல் தெற்கு தீவு முழுவதும் உயர்ந்து நிற்கும் மவுண்ட் குக்கின் உச்சிக்கு மலையேறுவது, கணிக்க முடியாத வானிலையால் அனுபவம் வாய்ந்த ஏறுபவர்களுக்குக் கூட கடினமாகும்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மூன்று மலையேறுபவர்கள் மலையில் காணாமல் போனார்கள்.
பல நாள் தேடுதலுக்குப் பின்னர் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் அவர்களின் உடல்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை – மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மவுண்ட் குக் உச்சிக்கு செல்ல முயன்ற பலர் இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















