எத்தியோப்பியாவின் எரிமலை வெடிப்பிலிருந்து சாம்பல் புகை மூட்டங்கள் வெளியேறுவதால், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் இன்று (25) தெரிவித்துள்ளன.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் விமான நிறுவனங்களுக்கான உத்தரவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 11 விமான சேவைகளை இரத்து செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களில் திட்டமிடப்பட்ட ஜித்தா, குவைத் மற்றும் அபுதாபி போன்ற மத்திய கிழக்கு இடங்களுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாக ஆகாசா விமானச் சேவை தெரிவித்துள்ளது.
சாம்பல் மேகம் சீனாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும், செவ்வாய்க்கிழமை GMT 1400 மணிக்குள் இந்திய வான் பரப்பை சூழும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (IMD) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வரலாற்றில் முதல் முறையாக வெடித்த பின்னர் 14 கிமீ (8.7 மைல்) உயரத்திற்கு சாம்பல் புகையை வான் நோக்கி அனுப்பியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை, ஏமன் மற்றும் ஓமானைக் கடந்து சென்ற பின்னர், சாம்பல் பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளை மூடியிருந்ததாக கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது.














