அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதிலும் வெளிநாட்டு பௌத்த விகாரைகளின் உதவியை ஒருங்கிணைக்க உதவி வழங்கப்படும் என்று ஹுணுபிட்டி கங்காராம விகாரையின் பிரதம விகாராதிபதி வண, கிரிந்தே அஸ்ஸஜி நாயக தேரர் தெரிவித்தார்.
நேற்று (04) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தபோதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பங்களிக்கும் வகையில் கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரை 30 மில்லியன் நிதி ரூபா நன்கொடை அளித்துள்ளது.
கங்காராம விகாரையுடன் நெருக்கமாகப் பணியாற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களிடமிருந்து எதிர்காலத்தில் இந்த நிதியத்திற்கு ஆதரவு பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த தேரர், இந்த கடினமான நேரத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கவும் ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களைப் பாராட்டினார்.
நாடும், மக்களும் சிரமங்களை எதிர்கொண்ட போதெல்லாம் கொழும்பு, ஹுணுபிட்டி கங்காராம விகாரை முன்வந்து செயற்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த சந்தர்ப்பத்தில் வழங்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேரர்கள், விகாரையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.












