சூரியனின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் சூரியன் குறித்த நம் புரிதலை மேம்படுத்திக்கொள்ளவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ‘பார்க்கர்’ விண்கலத்தை அனுப்பியிருக்கிறது. 2018இல் சூரிய மண்டலத்தின் மையத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட பார்க்கர் விண்கலம், அதீத வெப்பத்தையும் அதீத கதிர்வீச்சையும் தாங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை 26 முறை சூரியனுக்கு நெருக்கமாகச் சென்றிருக்கிறது. அது நெருக்கமாகச் சென்ற ஒவ்வொரு முறையும் சூரியனை நோக்கிச் செல்லும் தூரம் குறைந்திருக்கிறது. 2025 டிசம்பர் 13 அன்று 26ஆவது முறையாக பார்க்கர் விண்கலம் சூரியனை நெருங்கிச் சென்றது.
6,92,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் பார்க்கர் விண்கலம், 980 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கிக்கொண்டு சூரியனுக்குள் சென்று திரும்பியிருக்கிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரங் களில் பார்க்கர் விண்கலமே மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது.
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி யர் ஒருவர் விண்வெளிக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி விண்வெளி நோக்கி ஜூன் 25 அன்று சீறிப்பாய்ந்தது. அந்த விண் கலத்தை இந்தியாவின் ஷுபன்ஷு சுக்லா செலுத்த, அமெரிக்காவின் பெகி வைட்சன் இந்தப் பயணத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.
இவர்கள் இருவருடன், போலந் தைச் சார்ந்த ஸ்வாவோஸ் உஸ்னைஸ்கியும், ஹங்கேரியைச் சார்ந்த திபோர் கபுவும் பயணிகளாகச் சென்றார்கள். இந்த நால்வரும் 18 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற் கொண்டார்கள். பின்னர், தாங்கள் சென்ற அதே க்ரூ டிராகன் C213 மூலம், பூமிக்குத் திரும்பினார்கள். தங்கியிருந்த நாள்களில், இந்த நால்வர் குழு 60க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டது.
பூமியில் மனிதர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இயங்கும். ஆனால், விண்வெளியில் எடையற்ற நிலை காரணமாக ரத்தம் மேல் பகுதிகளில் அதிகம் தேங்கும். இதன் விளைவாக, கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு தலைவலி உண்டாகும்.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப உடல் பழகிக்கொள்ள இரண்டு நாள்கள் தேவைப்படும். நான்காம் நாளிலிருந்து ஷுபன்ஷு சுக்லா தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். எடையற்ற நிலையில் தசை செல்கள் எவ்வாறு சீர்குலைகின்றன எனும் ஆய்வை மேற்கொண்டார்.
இந்த ஆய்வு விண்வெளி வீரர்களின் உடல் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பூமியில் தசை நலிவு நோய்கள் (muscular dystrophy) போன்ற பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளைக் கண்டறியவும் உதவும். ஐந்தாம் நாள் முதல், விண்வெளிப் பயணத்தின்போது வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதற்காக நுண்பாசி (மைக்ரோ ஆல்கே) உற்பத்தி குறித்த ஆய்வுகளை ஷுபன்ஷு தொடங்கினார்.
ஆறாம், ஏழாம் நாள்களில் சயனோபாக்டீரியா என்கிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறித்த ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டன. எட்டாம் நாளில் தர்டிகிரேடு என்கிற சிறப்பு நுண்ணுயிரிகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். 11ஆம் நாளில் தாவர வளர்ச்சி குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
12ஆம் நாள் முதல் 14ஆம் நாள்வரை முளைத்த தாவரங்களின் படங்கள் எடுக்கப்பட்டு, அவை பூமிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் குளிரூட்டியில் பாதுகாக்கப்பட்டன. 18ஆம் நாள் மூளை ரத்த ஓட்டம் பற்றிய செரிப்ரல் ஹீமோடைனமிக்ஸ் ஆய்வு, நியூரோமோஷன் வி.ஆர்.ஆய்வு, டெலிமெட்ரிக் ஹெல்த் ஏ.ஐ. ஆய்வு போன்ற கூட்டு ஆய்வுகளில் ஷுபன்ஷு சுக்லா பங்கேற்றார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன மான நாசாவும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இணைந்து உருவாக்கியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நிசார்’ (NISAR – NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
2025 ஜூலை 30 மாலை 5:40 மணிக்கு, இஸ்ரோவின் ‘ஜிஎஸ்எல்வி-எஃப்16’ ஏவூர்தி மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக் கோள், ஏறக்குறைய 12 நாள்களுக்கு ஒரு முறை பூமியின் ஒவ்வொரு புள்ளியையும் மீண்டும் மீண்டும் படம்பிடிக்கும் திறன் கொண்டது.
இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், பேரிடர்கள் போன்றவற்றை நுட்பமாகவும் தொடர்ச்சி யாகவும் கண்காணிக்க முடியும். நிலப் பயன் பாட்டு மாற்றங்கள், சூழலியல் மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைக் கண்டறிய இது பெரிதும் உதவும்.
2025 ஜனவரி 29இல் ‘என்.வி.எஸ்-02’ (NVS-02) என்கிற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியதன் மூலம் இஸ்ரோ தனது 100ஆவது ஏவூர்தி செலுத்துதலை நிறைவுசெய்தது. 1969இல் தும்பா கிராமத்துக்கு அருகே சைக்கிளில் சிறு ரக ஏவூர்தியை ஏந்திச் சென்று விண்ணில் செலுத்தி, அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுப் படிப்படியாக இந்த நிலையை இஸ்ரோ எட்டியுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கியப் பங்கை உணர்ந்திருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அமெரிக்கா, அன்றைய சோவியத் ஒன்றியத்துக்குப் பிறகு மூன்றாவது நாடாக இந்தியாவிலும் விண்வெளி ஆய்வைத் தொடங்க ஹோமி பாபாவின் உந்துதலின் பெயரில் ஆதரவு வழங்கினார்.
விண்வெளி ஆய்வுக்கு அகமதாபாதில் விக்ரம் சாராபாய் நிறுவிய இயற்பியல் ஆய்வு நிறுவனம் தலைமை ஏற்றது. இதன் தொடர்ச்சியாக, நேருவின் ஆதரவில் விக்ரம் சாராபாய் 1962 இல் விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) என்கிற சிறப்பு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இந்த அமைப்புதான் 1969இல் இஸ்ரோவாக (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – Indian Space Research Organization) மாறியது.


















