தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடும் ஐக்கியத்தோடும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக இலங்கைக்கு ஒரு தோல்வியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிற்கு ஒரு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் பிரேரணை இல்லையென சிவகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பூகோள அரசியலின் பிரகாரம் இருதுருவ அரசியல் போக்கின் அடிப்படையில் அமெரிக்கா சார்பு, சீன சார்பு என்கின்ற இரண்டு சார்பு நிலைகளுக்குள் இலங்கை தொடர்பாக பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 30/1 தீர்மானத்தினுடைய அளவில்கூட 46/1 தீர்மானத்தின் உள்ளடக்கம் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சிவகரன், குறிப்பாக சாட்சியங்களைப் பதிவு செய்தலும் பாதுகாத்தலும் என்கின்ற பொறிமுறையைத் தவிர ஏனைய பொறிமுறைகள் புதிய தீர்மானத்தில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் நல்லிணக்கம் என்கின்ற நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகூட இலங்கையில் தோற்றுவிட்ட இந்தச் சூழ்நிலையில் கடந்த 11ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வாறான நியாயயும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் மகிழ்வுடன் வரவேற்கக்கூடிய நிலையில் இல்லை எனவும் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் ஒரு விவாதப் பொருளாக இருக்கின்றது என்பதில் மட்டுமே திருப்திகொள்ள முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயத்தில் இந்தியா நடுநிலை வகித்துள்ளமையை மிக மோசமான செயலாகவே பார்ப்பதாகவும் இவ்வாறு மதில் மேல் பூனையாக இருப்பது மிகவும் வருந்தத்தக்க விடையம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனைவிட, இந்தியாவிற்காக பரிந்து பேசுகின்ற தமிழ் கட்சிகள் அல்லது வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்குக் கொடுக்கப் போகின்றார்கள் எனப் போரட்டத்தை முன்னெடுத்த தமிழ் கட்சிகள் இப்போதும்கூட இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்ற சூழல் மிக வேதனையளிப்பதாக சிவகரன் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில், தமிழர் தரப்பு எதிர்காலத்தில் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் இணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பும் தார்மிகக் கடப்பாடும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை எதிர்கொண்டுள்ள சமூகம் ஐக்கியத்துடன் இயங்க வேண்டும் எனவும், இல்லாதுவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.