ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் மேற்கொள்வார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.
செங்கலடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தக் காலத்தில்கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டார்.
ஆனால், தற்போதைய சூழலில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை.
ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம்மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது.
அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்களை அரசாங்கத்திற்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள்.
இது சம்பந்தமாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.