நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கு தெரியுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொட்டகலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, கம்பனிகளின் செயற்பாடு குறித்து ஜீவன் தொண்டமானிடம் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை எழுப்பி இருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிகாலத்தில் 50 ரூபாய், 100 ரூபாய் கூட்டுவதாக கூறி 5 வருடகள் மாத்திரமே கடத்தப்பட்டன. இதன்போது எவரும் அதற்கு எதிராக எந்ததொரு கருத்தினையும் முன்வைக்கவில்லை.
ஆனால் தற்போது தொழிலாளர்களின் நலனை கருத்திற்கொண்டு, கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். இந்நிலையில் ஒரு சிலர், தொழிலாளர்களை குழப்பும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
அதாவது, அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. அதனால் நாடாளுமன்றத்தில் சட்டத்தினை இயற்றி சம்பள உயர்வை, ஏன் வழங்க முடியாது என கேள்வி எழுப்புகின்றனர்.
எந்ததொரு விடயத்திணை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.
அதாவது தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக, சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த செயற்பாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் உரிமையோ அல்லது நீதிமன்றம் செல்லும் உரிமையோ கம்பனிகளுக்கு இருக்கின்றன.
இதேவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.