அமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அமெரிக்காவின் கெபிடல் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் பொலிஸ் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்குப் போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம். வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.
கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே வந்த மர்பநபர், அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, குறித்த சந்தேகபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்ட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.