புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அதன் பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பாக அரசாங்கம் விசாரணையை நடத்தி வருகிறது. இதற்கமைய இந்த விடயத்தின் பின்னணியில் உள்ள உண்மை, சமூகத்திற்கு வெளிப்படுத்தப்படும்.
குறித்த எண்ணெய் விவகாரம் பொய் என்றால், அத்தகைய பொய்களை சமூகமயமாக்குவதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் அல்லது இந்த தேங்காய் எண்ணெய்க்கு எதிராக வேறு எந்த சக்தியும் இருக்கிறதா? என்பது தொடர்பாக ஆராயப்படும்.
ஏனென்றால், ஒவ்வொரு நாடுகளிலும் இதுபோன்ற உள்ளூர் உற்பத்தியை நிறுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் கூட நடவடிக்கை எடுத்துள்ளன என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆகவே, இன்று நாம் உள்ளூர் உற்பத்தியை வலுப்படுத்த முயற்சிக்கும் ஒரு நேரத்தில், இதுபோன்ற ஒரு சக்தி இதற்குள் செயல்படுகிறதா என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
மேலும் அரசாங்கமாக எங்கள் கொள்கைகள் தெளிவாக உள்ளன. மேலும் எண்ணெய் விவகாரம் பொய்யாக இருந்தால், அந்த பொய்யை பரப்புவதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.