இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், அவ்வாறான எந்தவொரு திட்டமிடலும் இடம்பெறவில்லையெனவும் இது தவறான செய்தியென்றும் கடற்றொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கைக் கடற்பரப்பில், நூற்றுக் கணக்கான இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதும் என பிரச்சினை தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அத்துடன், யுத்த காலத்திலும் அதன்பின்னரான தற்போதைய சூழ்நிலையிலும் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டும் உள்ளார்கள். இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது.
அத்துடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை மீது நடவடிக்கைகளை எடுத்தாலும் அவர்களின் வருகை என்பது ஒரு சகஜமானதாகவே காணப்படுகிறது. இதற்கு மீன் வளம் பிரச்சினையாக இருக்கலாம்.
அதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு போன்ற பகுதிகளின் மீனவர்களின் தொழில் முறைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது முக்கியமானது.
எனவே, அரசாங்கம் வடக்கில் மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டுத்தான் எந்தவொரு முடிவுக்கும் வரவேண்டுமே தவிர, அமைச்சர் தான் விரும்பியவாறோ அல்லது அரசாங்கம் விரும்பியவாறோ முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.