கிரீன்லாந்தின் மீது கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கட்டமைக்கும் தனது திட்டத்தை கனடா எதிர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி நேரடியாக தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகிறார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், ‘ராணுவ பலம், பொருளாதார பலமுடைய நாடுகள், அவற்றை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்’, என தெரிவித்துள்ளார்.
அதே கூட்டத்தில், இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது எனவும் எங்களிடமிருந்து பல சலுகைகளை பெறும் அந்நாடு, நன்றியுடன் இல்லை’ எனவும் விமர்சித்தார்.
இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி, ‘அமெரிக்காவின் தயவால் நாங்கள் வாழவில்லை’ என பதிலளித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப்,’கனடா பிரதமர் கார்னிக்கு அமைதி வாரியத்தில் இணைய விடுத்த அழைப்பை ரத்து செய்கிறேன்’ என அறிவித்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் கனடா பிரதமர் மீது ஜனதிபதி டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு கிரீன்லாந்தின் மீது கட்டப்படுவது கனடாவைப் பாதுகாக்கும் என்றபோதிலும், கனடா அதற்கு எதிராக உள்ளது எனவும் அதற்குப் பதிலாக, அவர்கள் சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் எனவும் அந்தச் சீனா முதல் வருடத்திலேயே அவர்களை விழுங்கிவிடும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.














