மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக நேற்று மன்னார் ஆயர் இல்லத்திற்கு ஆயரின் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டதுடன் மக்களின் அஞ்சலிக்காக ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) பல்லாயிரக் கணக்கான மக்கள் இன, மத பேதமின்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் ஆயிரின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அங்கு, நாளை மாலை முதல் நாளைமறுதினம் திங்கட்கிழமை மதியம் இரண்டு மணிவரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை மூன்று மணியளவில் பேராலயத்தில் இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளதுடன் பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, ஆயருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வரும் திங்கட்கிழமையை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.