தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கே இவ்வாறு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக 7 பிரிவுகளின் கீழ் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும்பங்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அதன்படி, சுமார் 40 இலட்சம் குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறவுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கும் சமுர்த்தி உதவி பெறுவோருக்கும் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை இன்று முதல் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.