அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம்செய்த அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “அரசாங்கத்திற்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் உடனடியாக அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுமென நான் நம்பவில்லை.
அதில், ஒரு பலவீனமான நிலையை ஏற்படுத்தலாமே தவிர, அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் இருக்காது.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் தொகுதிக்கு மூன்று பேரை நியமிப்பது என்ற பொதுஜன பெரமுனவின் யோசனை நாட்டின் எந்தப் பகுதிக்கும் சாத்தியமில்லாத மற்றும் குழப்புகின்ற ஒன்றாகும்.
ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவரை நிறுத்திவிட்டு அவற்றைத் தாம் வென்றெடுக்கலாம் என்று பஷில் ராஜபக்ஷ எண்ணியிருக்கலாம். அதற்காக இப்படியொரு திட்டத்தினை வைத்திருக்கலாம். இது ஜனநாயகத்தையும், அரசியல் கட்சிகளையும் கேலிக்கிடமாக்கும் விடயமாகவே நான் பார்க்கின்றேன்” என்றார்.