தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வட பகுதியில் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கோட்டாபய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகும் முன்னரே மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதாவது பொருளாதார ரீதியாக அரசியல் ரீதியாக காடழித்தல் சிங்கராஜ வனத்தை அழித்தல், வேலையில்லா பிரச்சினை, தமிழர் இடங்களை தொல்பொருள் திணைக்களத்திடம் கையகப்படுத்தல், முக்கிய இடங்களை ஏனைய நாடுகளுக்கு விற்றல் போன்ற பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
அந்த எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் உட்பட ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என வகைதொகையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த கைதுகள் தென்பகுதியில் உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காக இந்த அரசினால் முன்னெடுக்கப்படும் ஒரு நாடகமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இங்கே கோட்டாபய அரசானது புலிகள் மீள உருவாவதை கட்டுப்படுத்துகின்றது. இங்கே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கட்டுப்படுத்துகிறோம் என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே இந்த செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செயற்பாட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது. சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களுடைய உரிமை. அந்த எதிர்ப்புக்கு கூறிய காரணத்தை கண்டறிந்து இந்த அரசாங்கம் சரி செய்ய முன்வர வேண்டும்.
அதை விடுத்து, வடக்கில் ஒரு புலிப் பூச்சாண்டியை காட்டி தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்வதை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.