கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் உண்மையான நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தலைவர் உபுல் ரோஹன இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை வெளியிடுவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
ஏப்ரல் 12 முதல் இரண்டாவது டோஸ் வெளியீடு தொடங்கும் என்று சுகாதார அதிகாரிகள் முன்னர் அறிவித்தனர். இருப்பினும், அவர்கள் இப்போது இது குறித்து ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடத் தவறிவிட்டனர்.
அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியில் சில தெளிவற்ற தன்மைகள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தடுப்பூசியின் முதல் அளவை வழங்கியவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை முதல் டோஸ் வழங்கப்பட்ட அனைவருக்கும், இரண்டாவது டோஸ் கொடுக்க போதுமான தடுப்பூசிகள் இல்லை. இந்த தடுப்பூசி திட்டம் தற்போது ஒரு சிக்கலான நிலையில் உள்ளது.
ஆகவே சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக தடுப்பூசி திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.