இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நெருக்கடி இருந்தபோதிலும் நாடு உறுதியளித்ததைப்போன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
எனினும் தடுப்பூசிகளை விநியோகிக்கும் திகதி குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இலங்கையில் தற்போது 3 இலட்சத்து 50 ஆயிரம் டோஸ் தடுப்பூசி உள்ளது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
கொவிஷீல்ட் அஸ்ட்ராசெனகா கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இலங்கைக்கு அதிக அளவுகளை வழங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இருப்பினும் சீரம் நிறுவனம் தடுப்பூசியை வழங்கும் திகதி குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.
எவ்வாறிருப்பினும் ஏப்ரல் இறுதிக்குள் அல்லது மே மாத தொடக்கத்தில் தடுப்பூசிகள் வரும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் தடுப்பூசிக்கான உள்ளூர் தேவை உள்ளபோதும் இந்திய சீரம் நிறுவனம் இலங்கைக்கு அதிகமான அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.