முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,கடற்படை மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் இணைந்த கடற்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து தடை செய்யப்பட்ட தொழில் முறையான வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடற் படையின் கிழக்கு மாவட்ட தளபதி றியர் அட்மிறல் வை.எம். ஜெயரத்ன, கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கலிஸ்ரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத் தலைவர் ஜோன்ஸன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் நிகஸன் ஆகியோருக்கு இடையில் நேற்று( திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து முல்லைத்தீவு கடற்பரப்பினுள் நுழைகின்ற கடற்றொழிலாளர்கள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக, தொடர்ச்சியாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.