2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்.
கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று காலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், அரசியல் தலையீடு வெளிப்படையான விசாரணையின் தாமதத்திற்கு வழிவகுத்தது என குறிப்பிட்டார்.
எனவே ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மை வெளிப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்க ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும் அம்பலப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உண்மையை தாமதப்படுத்துவது முழு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்கும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் வழக்குத் தொடரப்படாத சூழலில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.