கொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் இருந்து தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது.
மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் இலங்கையின் பிற பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த சூழ்நிலைகளில் உயிர்களையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க பொதுமக்களுக்கு 100 சதவீத பொறுப்பு உள்ளது.
இதேவேளை முஸ்லிம்களின் ரமலான் கொண்டாட்டத்திற்கு தொடர் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து மதத் தலைவர்களையும் பக்தர்களையும் ஆபத்தை அடையாளம் கண்டு பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100,000 யை நெருங்க உள்ளது.
மேலும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 969 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 99,691 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 94,036 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 5021 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 634 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.