நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 19ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
மும்பையில் உள்ள வங்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமானது.
இதில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி, சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பாக, இறுதி நேரத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவர் கடைசி ஓவரில் மாத்திரம் அணிக்கான 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், டு பிளெஸ்ஸிஸ் 50 ஓட்டங்களையும் ருத்துராஜ் கெய்க்வாட் 33 ஓட்டங்களையும் ரெய்னா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பாக ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 192 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியின் வீரர்கள் பலர் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இதனால், 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெங்களூர் அணி 69 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அணிசார்பாக, தேவ்டுத் படிக்கல் 34 ஓட்டங்களையும் கிளென் மக்ஸ்வெல் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில், ஒரு ஓட்டமற்ற ஓவருடன் நான்கு ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அத்துடன், இம்ரான் தாகிர் இரண்டு விக்கெட்டுகளையும் குரன் மற்றும் சர்துல் தாகுர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சகல துறையிலும் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை, புள்ளிகள் பட்டியலில் இந்த வெற்றியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று எட்டுப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அத்துடன், இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பெங்களூர் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வியுடன் எட்டுப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.