நாட்டில் சீன ஈழம் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சங்கானையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் ஈ.சரவணபவன் மேலும் கூறியுள்ளதாவது, “சீனாவுக்கு நாட்டை அடகு வைக்கும்போது அமைதியாக செயற்படும் இவர்கள், தமிழர்கள் தனியான அலகு கேட்டபோது மாத்திரம் பொங்கியெழுந்தனர்.
மேலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமையினால் தமிழர்களின் பிரச்சினையை மீண்டும் சர்வதேசம் கையில் எடுக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்துடன் தமிழ் இளைஞர்களின் 80 வருட, அர்ப்பணிப்பின் காரணமாகவே நாங்கள் தற்போது சர்வதேச கவனத்தை பெற்று இருக்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடு இடம்பெற்றிருக்காவிட்டால், தமிழ் மக்கள் எப்போதோ நாட்டிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் மறந்து விடுகின்றோம். ஆனாலும் அந்த வரலாறுகள் இளங்கலைஞர்களினால் நினைவூட்டப்படுகின்றமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.
இதேவேளை நாட்டில் 216 ஹெக்ரெயர் பரப்பில் கடல் நிரப்பப்பட்டு, சீனாவுக்கு நகரொன்று உருவாக்கப்படுகின்றது. அதில் 90 ஏக்கர் நிலம் இலங்கைக்கு சொந்தம் என்பதுடன் மிகுதி சீனாவுக்கே சொந்தமாகும்.
அந்தப் பகுதிக்கு தனியான சட்டம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த நிலவரம் மேற்குலக நாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லாதமையினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கருவியாக்கி, மீண்டும் கையில் எடுப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.