ஒக்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக மாற்று தடுப்பூசியை வழங்குவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது என தேசிய ஔடத அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையால், ஏனைய நாடுகளுக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதற்கான மாற்றுவழி குறித்து கருத்து வெளியிடும்போதே தேசிய ஔடத அதிகார சபையின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கையிலும் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 9 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களுக்கு இரண்டாவது டோஸை செலுத்த வேண்டியுள்ள நிலையில், இந்தியாவிலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு சீனா, அமெரிக்கா, ரஸ்யா ஆகிய நாடுகளின் தடுப்பூசிகளைப் பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு இரண்டு வேறுப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் மாறுபட்ட தடுப்பூசிகளை ஏற்றி முன்னேற்றகரமான விளைவுகளைப் பெற்றுள்ளனர்.
இதேநேரம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில் எமக்கு தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அதன்படி, ரஷ்யாவிடமிருந்து முதலாம் கட்டமாக 2 இலட்சம் தடுப்பூசிகளும் பின்னர் 4 இலட்சம், 8 இலட்சம் என 1.2 மில்லியன் வரையில் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
அதேபோல மே மாதத்தில் அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசிகளும் 7 மில்லியன் அளவில் கிடைக்கவுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.