நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 24ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமானது.
இதில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்களைப் பெற்றது.
அணிசார்பாக, அணித்தலைவர் சம்சன் 42 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 41 ஓட்டங்களையும் சிவம் டுபே 35 ஓட்டங்களையும் ஜெய்ஸ்வல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் மும்பை அணி சார்பாக ராகுல் சாகர் இரண்டு விக்கெட்டுகளையும் போல்ற் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், பதிலுக்கு 172 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பாக, குயின்டன் டி ஹொக் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் குருணல் பாண்டியா 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில்,கிரிஸ் மொரிஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் முஸ்தாபிஸர் ரஹ்மான் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டி ஹொக் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை, இந்தப் போட்டியின் வெற்றியுடன் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் ஆறு போட்டிகளில் மூன்றில் வெற்றி மூன்றில் தோல்வியுடன் ஆறு புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
அத்துடன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.