இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கண்டியைச் சேர்ந்த (85 வயது) பெண்ணொருவர் கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னரே உயிரழந்துள்ளார்.
இதேவேளை வெலிமடையைச் சேர்ந்த (72 வயது) பெண்ணொருவர் அம்மாவட்ட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடரந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொவிட் நியூமோனியா நிலை காரணமாக கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மேலும் பொரலெஸ்கமுவைச் சேர்ந்த (49 வயது) பெண்ணொருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக கடந்த 25ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
களுத்துறையைச் சேர்ந்த (77 வயது) ஆண்ணொருவர், அம்மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கொவிட் நியூமோனியா நிலை காரணமாக கடந்த 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நாட்பட்ட சிறுநீரக நோயுடன் கூடிய கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நாவலப்பிட்டியவைச் சேர்ந்த (61 வயது) பெண்ணொருவர் அம்மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைனைத் தொடர்ந்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தநிலையில் கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது. இன்னும் 10 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.