சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செல்வாக்கு செலுத்தவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இலங்கை ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அந்த நிறுவனம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தேசிய விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில், சுகாதார தயாரிப்புக்களை அவசரகால தேவைக்கு பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கான சகல உரிமைகளும் அந்தந்த நாடுகளுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் உள்நாட்டில் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரங்கள் அந்தந்த நாடுகளின் விருப்பப்படி வழங்கப்படுகின்றன என்றும் அவை உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டவை அல்ல என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான கலந்துரையாடலை அடுத்து அன்று மாலை அவசரகால பயன்பாட்டுக்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.