இரண்டாம் கட்டமாக எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தபோதும், சுகாதார அதிகாரிகள் இதுவரை இந்த விடயத்தில் எந்த உறுதிப்பாட்டையும் அடையவில்லை என அறிந்துகொள்ள முடிகின்றது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே, இலங்கையில் இருவேறு தடுப்பூசியை செலுத்திக்கொள்வது குறித்த சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் நடத்தப்படும் ஆராய்ச்சி குறித்து இதுவரை தங்களுக்கு எந்த உறுதிப்பாடும் கிடைக்கவில்லை என்றும் ஆரமப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் உதய கம்மன்பில, வெவ்வேறு தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என துறைசார் விசேட நிபுணர்களை மேற்கோளிட்டு அறிவித்திருந்தார்.
இதேவேளை கடந்த மாதம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர, கோவிஷீல்ட்டைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக வேறு தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியம் குறித்து பரிசீலிக்க முடியும் என கூறியிருந்தார்.
இருப்பினும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தடுப்பூசியை கலந்து செலுத்துவதற்கான சாத்தியம் குறித்த ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு சுகாதார அமைச்சு தொடர்ந்தும் காத்திருக்கிறது.
பெப்ரவரியில், ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியுடன் கலந்து சோதிக்க இங்கிலாந்து ஒரு சோதனையைத் தொடங்கியது.
அத்தோடு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஆகியவற்றின் கலவையைப் பார்க்கவும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்கள் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியிலிருந்து இரண்டாவது டோஸைப் பெறலாம் என்று ஜேர்மனியும் பிரான்ஸும் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படும் அரிய இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக பைசர்-பயோஎன்டெக் அல்லது மாடர்னா தடுப்பூசிகள் மாற்றாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.