இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிற்பதாகவும் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டினார்.
இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் அத்திபாரத்திலிருந்துதான் தமிழ்த் தேசமக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.