இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் கொவிட் மாறுபாடு கணிசமாக அதிக அளவில் பரவக்கூடியதாகக் கண்டறியப்பட்டால் சில கடினமான தேர்வுகள் இருக்கக்கூடும் எனவும் எச்சரித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு இடையிலான காத்திருப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களிலிருந்து எட்டு ஆக குறைக்கப்படும்’ என கூறினார்.
இந்தியன் கொவிட் மாறுபாட்டின் தொற்றுகள் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளன என்று பொது சுகாதார இங்கிலாந்து புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
போல்டன், பிளாக்பர்ன், லண்டன், செப்டன் மற்றும் நாட்டிங்ஹாம் உள்ளிட்ட இங்கிலாந்து முழுவதும் 15 பகுதிகளில் சர்ஜ் சோதனை ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, நேர்மறையான பரிசோதனையின் 28 நாட்களுக்குள் இங்கிலாந்தில் மேலும் 17பேர் இறந்துள்ளனர். மேலும் 2,193 கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.