இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்தும் நினைவேந்தல் நிகழ்விற்கு தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதையும் கண்டித்து அறிக்கையோ ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் “நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்தத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
அந்த பொதுமக்களின் நினைவுகளை மீட்டிக்கொள்வதும் அவர்களை கௌரவப்படுத்துவதும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். சர்வதேச சட்டவாயங்களின் அடிப்படையில் இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வருடமும் பொதுமக்களை நினைவுகூர்வதாக இருந்தாலும் சரி, போராளிகளை நினைவுகூர்வதாக இருந்தாலும்சரி பலத்த போராட்டத்தின் மத்தியிலேயே இத்தகைய நினைவுகூர்தலை நாங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது.
கொரோனா என்பது ஒருபக்கம் இருக்க, ஊர்வலங்களாக இருந்தாலும்சரி, உண்ணாவிரதங்களாக இருந்தாலும்சரி ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு சிறிய பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும்சரி உடனடியாகவே பொலிசார் நீதிமன்றங்களை அணுகி தடையுத்தரவைப் பெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.
இதேநிலைமைதான் முள்ளிவாய்க்காலில் மரணித்துப்போன எமது மக்களை நினைவுகூர்வதற்கெதிராகவும் நீதிமன்ற தடையுத்தரவுகளையும் பொலிசார் பெற்றுள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல், இறந்த மக்களை நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறிய நினைவுச்சின்னம்கூட அரச இயந்திரத்தினால் உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. இராணுவம் பொலிஸ் உட்பட்ட அரச இயந்திரமானது மக்களின் உணர்வுகளை சிதைப்பதென்பது கண்டிக்கத்தக்கதும் அநாகரிகமானதுமாகும்.
அரசாங்கத்தின் மனித உரிமைக்கெதிரான செயற்பாடுகளை கனேடிய தூதுவர் கண்டித்திருப்பதை நாங்கள் வரவேற்பதுடன், ஏனைய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிக்க முன்வரவேண்டும் என்பதுடன் நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்விதமான அரச தலையீடுகளுமின்றி நடைபெறுவதற்கு அரசாங்கத்திற்கு தமது அழுத்தங்களை உயர்மட்ட அளவில் பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
தென்பகுதியில் அரசுக்கெதிராகப் போராடிய பொதுமக்களும் போராளிகளும் சிங்கள மக்களால் நினைவுகூரப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள். அதற்கு எத்தகைய தடை உத்தரவுகளும் கிடையாது. வடக்கு-கிழக்கில் புதிய புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்கப்படுகிறது. அதற்காக நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் ஒன்றுகூடி இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன் பிரித் ஓதுதலும் இரவு பகலாக நடைபெறுகிறது.
ஆனால் தமிழ் மக்கள் தமது மரணித்துப்போன உறவுகளை நினைவுகூர்வது தடைசெய்யப்படுகிறது. இதிலும்விட மோசமான இனவாத அரசொன்று இலங்கையில் இருந்திருக்க முடியாது. அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை பல்வேறுபட்ட முனைகளிலும் அடக்கியாள முயற்சிப்பதுடன் அவர்களது கௌரவத்தையும் சிதைத்து அழிக்கின்றது.
அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வரவேண்டும். எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி; தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்வதற்கு அரசாங்கம் வழிவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.