கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, ”முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழமைப்போன்று இம்முறையும் இராணுவம் மற்றும் அரசாங்கத்தினால் நெருக்கடி, அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் தற்போது அச்சுறுத்தலாக காணப்படுகின்ற கொரோனா வைரஸ் தொற்றினைக் கூட தனது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது.
இதனை பொலிஸார் தொடுக்கும் வழக்குகள் ஊடாக புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. யுத்த தர்மங்களுக்கும் மனிதாபிமானச் சட்டங்களுக்குப் புறம்பாகவே திட்டமிட்டு, எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களை நினைவு கூருவதற்கு எங்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றது.
இதேவேளை படுகொலைகள் இடம்பெற்று தசாப்தங்கள் கடந்துள்ள போதும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை. மாறாக நினைவேந்தல் உரிமையைக் கூட கேள்விக்கு உட்படுத்துவதிலேயே அதிக கரிசனை கொள்கின்றது” என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.