கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 5 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முடக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதிகளில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களைத் தவிர ஏனைய அனைத்து கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணவதிப்பிள்ளை கருணாகரன் மேலும் கூறியுள்ளதாவது, “ மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு, நொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு மாவட்ட மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.