தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கத்தின் சடலம் சுகாதார வழிமுறைப்படி தகனம் செய்யப்பட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் துரைரெட்ணசிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனையடுத்து, அவரது சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் இருந்து திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னர் அன்னாரது இறுதிக்கிரிகைகள் இன்று காலை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெற்றதையடுத்து, அவரது சடலம் சுகாதார வழிமுறைப்படி தகனம் செய்யப்பட்டது.
கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் திருகோணமலை – மூதூர் சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார்.
1960ஆம் ஆண்டு முதல் பல பாடசாலைகளில் பணியாற்றிய பின்னர், 1982இல் சேனையூர் மத்திய கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.
1998இல் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு பின்னர் தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி இளைப்பாறினார்.
துரைரெட்ணசிங்கம் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் இரண்டாவதாக வந்தும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 ஜுன் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் 2004 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக 2010 தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.
அதன் பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டபோதிலும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.
இவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.