தீ விபத்துக்கு உள்ளாகியுள்ள எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கழிவுகளை சேகரித்து, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணொளி காட்சிகள் மற்றும் பிரதேசவாசிகளிடமிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பமுனுகம, துங்கல்பிட்டி, நீர்கொழும்பு மற்றும் கொச்சிகட பொலிஸ் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
துங்கல்பிட்டி பொலிஸ் பகுதியில் லொரியுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் மேலும் மூன்று பேர் பமுனுகம பொலிஸ் பகுதியில் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல கொச்சிகட பொலிஸ் பகுதிகளில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் அனைவரையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேநேரம், கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கழிவுகளில் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே அதனை சேகரிக்க வேண்டாமென்றும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.