வவுனியாவில் பயணத்தடையை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட 5 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று(வியாழக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மூன்று ஆலயங்கள், மற்றும் வீடுகளில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் உண்டியல்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக பூவரசங்குளம் பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாரிக்குட்டியூர், தாலிக்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதிகளை சேர்ந்த 5 இளைஞர்களை இன்று காலை கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 6 நீர் இறைக்கும் இயந்திரங்கள், ஒரு உண்டியல், மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களையும் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 19- 24 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கை வன்னி பிரதிப்பொலிஸ்மா அதிபர் லால்செனவிரத்தினவின் வழிகாட்டலில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய தலைமையில், ஐபி ஜெகத், உபபொலிஸ் பரிசோதகர்களான, தினேஸ்கரன், ரத்நாயக்க ஆகியோரைக் கொண்ட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.